அன்பென்ற சொல்லைத் தமிழ் கூற,
அது தந்தை என செவிக்குள் உருமாறும்!
கொஞ்சும் மொழி இவர் பேச.
என் நெஞ்சம் உருகிக் கரைந்தோடும்!
மாலை வெயில் மதில் தாண்ட,
மனம் வாசல் படியுடன் உறவாடும்!
கண்கள் இரண்டும் இவர் முகம் காண,
என் மழலை மொழி கதை கூறும்!
நான் உறங்கும் வரை விழித்திருந்து,
சோர்வடைந்த விழிகள் ஓய்வெடுக்கும்!
தவழும் நான் துணையின்றி நிற்க,
இவர் மனமோ நில்லாது ஓடும்!
இனிய பதினாறு இயல்பாய் எழுச்சி பெற,
என் மீசை முடியோ மெதுவாய் முதிர்ச்சி பெறும்,
எவராக வாழ்வாய் என இப்புவி கேட்க,
மனம் தானாக தந்தை வழி காணும்!
தனக்கென கிடைக்காத யாவும்,
மகன் கரம் சேர இவர் உழைக்க,
தடையாக வருவதை யாவும்,
இவர் கரம் உடைத்தெறியும்!
இன்று பலர் குரல் என் புகழ் பாடி வரவழைக்க,
மனம் இவர் கடந்த பாதைக்கு மகுடம் சூட்டும்!
தயங்காது உரக்கச் சொல்வேனே,
என் மகனுக்கும் இவர் பெரும் எடுத்துக்காட்டு!
Comments