பூமித் தாயின் வயிற்றில் பிறந்த ஜீவன் அனைத்துக்கும்
இவன் ஒற்றைக் காவலன்!
பிரபஞ்சம் மொத்தமும் சொந்தம் கொண்டாடும்
கண்கள் அறியா மாயக்கள்வன்!
சோதனை கொடுப்பவனும் இவனே,
சோகக்கதவை உடைத்து மீட்பவனும் இவனே!
உலகச் சரித்திரத்தை தன் சட்டைப் பையில் வைத்து அழகுப் பார்க்கும் வித்தகன்!
நேரம்....
நம்மை முதுமை ஆக்கும்,
முதிர்ச்சிப் பெற வைக்கும்!
நமக்கு உயரத்தையும் கொடுக்கும்,
உயர்வையும் கொடுக்கும்!
திசைகள் அனைத்தையும் பார்க்க வைக்கும்,
பாடம் கற்பிக்கும்,
பகுத்தறிவுக் கொடுக்கும்!
நேரம்....
அடைப்பட்டுக் கிடந்த அக்கினி ஆன்மாக்களின் பொறுமையை வீழ்த்தி போராட வைத்தவன்!
சாதியை தகர்த்து சமநிலை கொடுத்தவன்,
சமத்துவம் பேசி சமூகக் கண்களை திறந்தவன்!
முட்டாள்கள் கூறும் மூட நம்பிக்கைக்கு,
முற்றுப்புள்ளி வைத்தவன்!
அறிவியல் பேசினான்,
அறிவுரைக் கூறினான்!
நினைத்துப் பார்க்க இயலா நிகழ்வுகளை மனிதனுக்கு நிகழ்த்தியும் காட்டினான்!
இவன் வானில் தோன்றும் சூரியன் போல்....
நம் அழகுக் கண்களைத் திறப்பது மட்டுமின்றி,
அறிவுக் கண்களைத் திறக்க வைப்பான்!
எத்துணை செல்வம் கொடுத்தாலும்,
மனிதன் திரும்பப் பெற முடியா இயற்கையின் பொக்கிஷம்!
இவன் அருமையைப்பற்றி கடிகார முட்களைக் கேளுங்கள்,
பலநூறு கதைகள் சொல்லும்!
நேரத்தை யுக்தியுடன் பயன்படுத்தத் தெரிந்தவன் அரசனாவான்,
அதை இயலாதவன் அடிமையாவான்!
Comments