ஆற்றோரம் விளையாடும் அழகுச் சிறுவன் இங்கே,
சுவற்றுக்குள் சொந்தம் தேடும் பாவச் சிறுவன் அங்கே!
கூட்டாளியுடன் ஓடிக் களைத்துப் போன கால்கள் இரண்டும் இங்கு வீட்டுத் திண்ணையில் ஓய்வு கொள்ளும்,
தனிமையில் பழகிக் கொள்ள அங்கே மாநகரம் அவனை நகர்த்திச் செல்லும்!
ஆசையோடு சோறூட்ட பாட்டியின் கைகள் இங்கு ஓடி வரும்,
கிண்ணத்தை மட்டும் கையில் வைத்து அச்சிறுவனின் மனம் அங்கு ஏங்கித் தவிக்கும்!
உறக்கம் கொள்ள பாட்டனின் நெஞ்சு இங்கு மெத்தையாக மாறும்,
வழி ஏதும் இன்றி அச்சிறுவனின் மனம் அங்கு இருட்டுக்குள் உறங்கும்!
செல்லம் கொஞ்சி பள்ளிக்குச் செல்ல இங்கு மாமன் கைகள் கன்னத்தைக் கிள்ளும்,
வழி அனுப்பி வைக்க நேரம் போதாமல் தாய் தந்தையின் கால்கள் அங்கு நில்லாமல் நகரும்!
அன்போடு கதைத்துக் கொண்டே இச்சிறுவனின் தந்தை பள்ளிக் கதைகள் கேட்க,
மாலை மங்கிய பின்னும் தந்தையின் கைகள் அங்கு கைபேசியுடன் உறவாடும்!
எதை தேடிப் போகிறது இத்தலைமுறையின் இம்மாநகர வாழ்க்கை?
செல்வத்துடன் சேர்த்து உறவுகளை அள்ளித் தாருங்கள்!
இருப்பிடம் எதுவாக இருப்பினும்,
இனிய உறவுகளோடு இருந்துப் பழகுங்கள்!
இன்பம் நிறையும்,
ஒழுக்கம் நிறையும்,
உணர்வுகள் நிறையும்,
அறிவுத்திறன் நிறையும்,
இனிய ஆசீர்வாதங்களோடு!
Comments