பல கோடி ஆசையோடு, பல நூறு கனவோடு,
பல்லாண்டு வாழவே, பெற்ற குழந்தை!
முன் செய்த பாவமோ பழிவாங்க விரட்ட,
முன்னோர் செய்த பிழையோ சதி செய்து துரத்த,
வழி ஏதும் இல்லாமல் சாக்கடையில் விழுந்தாள் விதியின் பிள்ளை!
வஞ்சகம் கொண்ட வன்மக் கூட்டம் வேலி கொண்டு சூழ,
வெளியே வந்து வெளிச்சம் காண துடித்துக் கிடந்தாள், நம் வேடனின் முல்லை!
சாதிவெறிப் பிடித்த மிருகங்களோ கொடிப் பிடித்து கீழே தள்ள,
சேற்றுச் சட்டையோடு எழுந்து நின்றாள், பள்ளிக்குச் செல்ல!
பட்டம் பெற்று மீண்டு எழ பகல் இரவு பாராது விழித்துக் கிடக்க,
ஆதிக்கம் கொண்ட அரக்கன் குலமோ காமம் தீர்த்து இவளை அடித்து சிதைக்க,
எழுச்சி பெறாமலே சாய்ந்து வீழ்ந்தாள்!
எழுந்த கால்கள் மீண்டும் மண்ணில் புதைய,
இவளை பெற்ற தாயோ கதறி அழுதாள்!
எதிர்த்து நிற்கும் காவல் கூட்டமே விலை போய் தீயை மூட்ட,
எதிர்பார்த்த நியாயம் கிடைக்காமல் ஏமாந்து நின்றாள்!
என்ன செய்ய போறோம்?
மறதி கொண்ட சுயநலக் கூட்டம் நாம்,
வேடிக்கை பார்க்க இவர்கள் வேதனை வேண்டுமோ?
சாதியை பெயரில் இருந்து கூட விலக்க இயலாத ஈனப்பிறவிகளாய் இருக்கும் நீங்கள்,
சமுதாயத்தின் சாபக் கேடு!
உங்கள் மேல் என் எச்சில் துளிகள் கூட பட வேண்டாம்,
துடைத்துக்கொண்டு சாதியை தேடுவீர்!
Comments